இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்


இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்
x

நெல்லையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

இளம் பெண் கொலை

நெல்லை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சந்தியா (வயது 18). இவர் நெல்லை டவுனில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுப்பதற்காக அருகில் உள்ள குடோனுக்கு சென்றார். அங்கு அவரை பின் தொடர்ந்து வந்த மேல முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது வாலிபர், தனது காதலை ஏற்க மறுத்ததால் சந்தியாவை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் சந்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

பாதிக்கப்பட்ட சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதுவரை சந்தியாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதற்காக திருப்பணிகரிசல்குளத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் நெல்லை உதவி கலெக்டர் அயூப்கான், துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் தயாசங்கர், தேவேந்திரகுல எழுச்சி இயக்க நிறுவனர் கண்ணபிரான், திருப்பணிகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் பெர்சி சுரேஷ், கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க தலைவர் அதிசய பாண்டியன், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சத்யா, தி.மு.க. மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.


Next Story