உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x

ஆரல்வாய்மொழியில் மீனவர் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்

ஆரல்வாய்மொழியில் மீனவர் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மா்ம சாவு

நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பரதர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50),மீனவர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 19-ந் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கீழூர் அரசு பள்ளி அருகில் உள்ள முண்டன்சாமி கோவில் அருகே அய்யப்பன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அய்யப்பன் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

போராட்டம்

ஆனால் இறந்த அய்யப்பனின் முதுகு, தலை பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். இதையடுத்து அய்யப்பனின் மனைவி பிரேமா அளித்த புகாரின் பேரில் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ேநற்று ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உறவினர்கள், உடலில் காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்ததாக கூறி மர்ம சாவை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்காமல் பிணவறை முன் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அய்யப்பனின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.


Next Story