உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சின்னாளப்பட்டியில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்தார். இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை
திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த மதுரைவீரன் மனைவி காளீஸ்வரி (வயது 52). கடந்த 18-ந் தேதி இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சின்னாளப்பட்டி பிரிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு காளீஸ்வரிக்கு கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
பின்னர் அன்றைய தினம் இரவு காளீஸ்வரி உடல்நிலை மோசமடைந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அம்பாத்துரை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காளீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு இருந்து இறந்ததாக சொல்லும் வரை அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.
விடிய, விடிய போராட்டம்
இதனால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உடலை வாங்க மறுத்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திண்டுக்கல் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு எட்டப்படாததால் போராட்டம் நீடித்தது.
இதற்கிடையே காளீஸ்வரிக்கு மருத்துவ சிகிச்சை செய்த அறிக்கை, அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் காளீஸ்வரி நடந்து வரும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உறவினர்களுக்கு காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவக்குமார், ஆத்தூர் தாசில்தார் வடிவேல் சரவணன் ஆகியோர் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை
அப்போது காளீஸ்வரியின் இறப்பு குறித்து உயர் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். 2 டாக்டர்கள் மூலம் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் நேற்று காலை 11 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து காளீஸ்வரி உடல் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.