பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை
பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை அரியலூரில் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமழப்பாடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பேரிடர் கால ஒத்திகை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டார். மேலும், வெள்ள பாதிப்பால் நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இதையடுத்து, பேரிடர் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கால்நடைகளை எவ்வாறு உயிருடன் மீட்பது, தொடர் மீட்பு பணியின் மூலம் பொதுமக்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் கால ஒத்திகை பயிற்சி எதார்த்தமான முறையில் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் திருமழப்பாடியில் நடைபெறும் இம்முகாமினை போன்று அழகியமனவாளம், வாழைக்குறிச்சி, கோவிந்தபுத்தூர், அயன்தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரிடர் கால ஒத்திகை முகாம் நடைபெற்றது. இம்முகாம்களின் மூலம் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்தும், மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். எனவே, இதுபோன்ற பேரிடர் கால ஒத்திகை முகாம்களை பொதுமக்கள் கண்டு பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, திருமழப்பாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று படுகையை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் வீடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் உடனடியாக முகாம்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பைகளில் எடுத்துக்கொண்டு வருவாய் துறையினர் ஏற்பாடு செய்திருந்த வேன் மூலம் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. வெள்ள காலங்களில் அவரவர் வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி நீச்சல் தெரியாத சூழ்நிலையிலும் தப்பித்து வரும் யுக்திகளை தீயணைப்பு மீட்பு படையினர் தத்ரூபமாக செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். சாலையில் காற்றில் முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் செயல் விளக்கம் அளித்தனர். வெள்ள நீரில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து மருத்துவ குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர். மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது குறித்து கால்நடை மருத்துவ குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.