வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை


வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை
x

வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.

திருச்சி

வெள்ள மீட்பு நடவடிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பயிற்சியை நடத்தியது. பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். ஒத்திகை பயிற்சியை தொடங்கி வைத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தார் போட்டால் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் 40, 50 ஆண்டுகால குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டி இருக்கிறது. பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலையை போட்டாலும் வீணாகிவிடும். தற்போதைய நிலையில் 576 சாலைகளில் 276 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

88 எக்டேர் விவசாய நிலம் பாதிப்பு

முன்னதாக கலெக்டர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ள காலங்களின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்த ஒத்திகை இன்று (நேற்று) திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது.

இன்று (நேற்று) காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்புக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருச்சியில் பயப்படும்படி வெள்ள அபாயம் என்று ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 எக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடையவில்லை.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

செயல் விளக்கம்

இந்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் பேரிடர் பணியில் இணை ந்து செயல்படும் துறைகள் மற்றும் பிற தொடர்பு நிறுவனங்களின் விழிப்புணர்வு நிலைகளை மதிப்பீடு செய்து, வெள்ள அபாய முன் எச்சரிக்கை அமைப்பின் செயல்பாடுகள் சரிவர இயங்குகின்றதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்றும், வெள்ளத்தில் சிக்காமல் எப்படி தப்பிப்பது? என்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா, கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லால்குடி, முசிறி

இதே போல் லால்குடி அருகே உள்ள கூகூர் கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சியில் லால்குடி தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆற்றில் ஆழமான பகுதியில் சிக்கிய ஒருவரை ரப்பர் படகில் சென்று மீட்பது, அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் முசிறி பரிசல் துறை காவிரி கரையில் நடத்தப்பட்ட ஒத்திகை பயிற்சியில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் காலங்களில் நீர்வரத்து அதிகமாகும் இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறையினர், செஞ்சிலுவை சங்கத்தினர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story