பல்லாவரம் வழக்கு தொடர்பாகஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை


பல்லாவரம் வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு

பல்லாவரம் வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

ஆணையாளர்

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவக்குமார் உள்ளார். இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக சிவக்குமார் இருந்தபோது பதிவான ஒரு லஞ்ச வழக்கு தொடர்பாக ஈரோட்டில் அவர் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

இதுபற்றிய தகவல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆணையாளர் சிவக்குமார் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு வீட்டில் சோதனை நடத்துவது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கொடுத்தனர்.

வீட்டில் சோதனை

போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு உடனடியாக புறப்பட்டார். மாலை 3.50 மணி அளவில் அவர் ஈரோட்டுக்கு வந்தடைந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு தயாராக நின்றிருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்தனர். உடனடியாக வீட்டின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. வீட்டுக்குள் சென்ற போலீசார் அனைத்து ஆவணங்களையும் எடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத பணம் உள்ளதா? என்றும் போலீசார் வீடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வீட்டின் அனைத்து அறைகளையும் சோதனையிட்ட போலீசார் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி இருந்த காரையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஒரு பாக்கெட்டையும் போலீசார் பிரித்து பார்த்தனர். மேலும் இரவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி

இந்த சோதனை முடிந்த பிறகுதான் பல்லாவரம் லஞ்ச ஒழிப்பு வழக்கு தொடர்பான முக்கிய ஆவணம் கைப்பற்றப்பட்டதா? கணக்கில் வராத பணம் சிக்கியதா? உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கடந்த மாதம் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story