மாணவர்களின் கல்வித்திறன் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு


மாணவர்களின் கல்வித்திறன் குறித்து  கலெக்டர் திடீர் ஆய்வு
x

உக்கம் பெரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

செய்யாறு

உக்கம் பெரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் பைங்கினர் தொடக்கப்பள்ளி மற்றும் உக்கம் பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்களிடையே கலந்துரையாடினார். மேலும் மாணவர்களின் கல்வித்திறனை பரிசோதனை செய்தார். மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை குறித்தும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

வாசிப்புத்திறன்

தொடர்ந்து மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்புத்திறனை பரிசோதனை செய்யும் வகையில் தொடக்கப்பள்ளி மாணவர்களை புத்தகங்களை வாசிக்க செய்தும், கேள்விகளை எழுப்பி பதில்களை கேட்டு அறிந்தும் மாணவர்களின் கல்வித்திறனை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் அதிகாரிகளிடம் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளை முறையாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பயணியர் விடுதி

அதனைத்தொடர்ந்து செய்யாறில் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் பயணியர் விடுதி மற்றும் செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டு உரிய ஆலோசனை வழங்கினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தும், மருத்துவமனையை சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாய்களை அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டுமென நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, ஒ.ஜோதி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story