செங்கோட்டை நகராட்சி கூட்டம்
செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசுகையில், "செங்கோட்டை நகரில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. ஆணையாளா் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். இதையடுத்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
சுடர்ஒளி பேசுகையில், "வார்டு பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை" என்றார்.
பா.ஜ.க. உறுப்பினா் வேம்புராஜ் பேசுகையில், "குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை" என்றார்.
தி.மு.க. உறுப்பினா் ரஹீம், தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நகராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என்றார். பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி நகர்மன்ற தலைவா் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினா்கள் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்று ஆணையாளரை சந்தித்தனர். தலைவா் தன்னிச்சையான போக்கில் செயல்படுவதாகவும் மன்ற தீர்மானங்கள் 17-ல் 8 தீர்மானங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக கருதுவதால் அதனை நிறைவேற்றக்கூடாது என புகார் மனு அளித்தனா்.
கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினா்கள் இசக்கித்துரை பாண்டியன், பினாஷா, இசக்கியம்மாள், மேரி, பேபிரெசவு பாத்திமா, சரவண கார்த்திகை, சந்திரா, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா, அ.தி.மு.க. உறுப்பினா்கள் சுப்பிரமணியன், முத்துப்பாண்டி, இந்துமதி, ராதா, சுகந்தி, சரஸ்வதி, செல்வக்குமாரி, பா.ஜ.க. உறுப்பினா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா்.