நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்
நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக ஆன்லைன் மூலமாக 36 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தினமும் 3000 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, திருவனந்தபுரம், சென்னையிலிருந்து 140-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ராணுவ உயர் அதிகாரிகளும் நேற்று இரவு வந்தனர். ராணுவ வீரர்கள் தேர்வு இன்று இரவு நடைபெறுவதையடுத்து இன்று காலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வர தொடங்கினார்கள். இதனால் வடசேரி பகுதியில் காலை முதலே இளைஞர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு வருகை தரும் இளைஞர்கள் அமர வசதியாக மூன்று இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. உழவர் சந்தை திடல், மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட வளாகம், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து நீச்சல் குளத்திற்கு செல்லும் பகுதி ஆகிய பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு வசதியாக குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 1-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு வசதியாகவும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது.
ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வின்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருபவர்களுக்கு உடல் தகுதி மேற்கொள்ளப்படும். மேலும் 1600 மீட்டர் தூரத்தை ஓடும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தின் ஓடுதளம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
இதனால் அண்ணா விளையாட்டரங்கத்தை வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் ஆள் சேர்ப்பு முகாம் அதிகாலை வரை நடைபெறும். பின்னர் மறுநாள் நள்ளிரவு நடத்தப்படும். நள்ளிரவு ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது.
ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் பகுதியில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.