பையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
பையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பையனூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனி நிர்வாகத்தினர் பக்கிங்காம் கால்வாயில் இருந்து அங்குள்ள சிறுபாலம் வழியாக மழை நீர் செல்லும் நீர்நிலை பாதையை ஆக்கிரமித்து அந்த கம்பெனிக்கு சுற்றுச்சுவர் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கம்பெனி நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.
நிலம் மீட்பு
இதனால் நேற்று திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, திருப்போரூர் மண்டல துணை தாசில்தார் சங்கீதா, பையனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமிதாமுத்துகுமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தமிழக அரசுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள, 8 சென்ட் அளவுள்ள நீர்நிலைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்டனர்.
இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது பையனூர் வருவாய் அலுவலர் வித்யா, பையனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், திருப்போரூர் குறுவட்ட அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.