தியேட்டர் வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா? போலீஸ் விசாரனை
கோயம்பேட்டில் தியேட்டர் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டர் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள தரைதள தண்ணீர் தொட்டியில் லாரியில் கொண்டு வந்த தண்ணீரை நிரப்புவதற்காக டிரைவர் ராமலிங்கம் தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்தார்.
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியது. தொட்டிக்குள் பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தியேட்டர் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். கோயம்பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டனர். கோயம்பேடு போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தவர் பூந்தமல்லி, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசபெருமாள் (வயது 42) என்பதும், ரோகிணி தியேட்டரில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பர் மற்றும் தச்சுவேலை வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
கடைசியாக கடந்த மாதம் 26-ந் தேதி அவர் தியேட்டருக்கு வேலைக்கு வந்தார். அதன்பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. எனவே அன்றே அவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆவதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.
வெங்கடேசபெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே குடிபோதையில் வேலை செய்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடல் முழுவதும் அழகிய நிலையில் இருந்ததால் அவர் அணிந்திருந்த உடையை வைத்துதான் இறந்து கிடப்பது வெங்கடேசபெருமாள் என போலீசார் கண்டறிந்தனர். அவர் தண்ணீர் தொட்டியில் விழுந்த பிறகு திறந்து கிடந்த மூடியை யார் மூடியது? அங்கு வேலை செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றாரா? என ஏன் கவனிக்காமல் இருந்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.