பண்பொழி கோவிலுக்கு சொந்தமான 143 ஏக்கர் நிலம் மீட்பு
பண்பொழி கோவிலுக்கு சொந்தமான 143 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
பண்பொழியில் பிரசித்தி பெற்ற திருமலை குமாரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நன்செய் நிலங்கள் ஏராளமாக உள்ளன. அதில் தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் 143 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 4-7-1979 முதல் புளியரையில் இயங்கி வரும் கூட்டுறவு குத்தகை பண்ணை சங்கத்திற்கு கோவிலில் இருந்து குத்தகைக்கு விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்த சங்கத்தில் இருந்து கோவிலுக்கு 869 கோட்டை நெல் குத்தகையாக கொடுக்க வேண்டும். மேலும் 863 வைக்கோல் கட்டுகளும் கொடுக்க வேண்டும். இதில் கூட்டுறவு பண்ணை சங்கத்தினர் சரிவர குத்தகையை கொடுக்கவில்லை. இதனால் கோவில் நிர்வாகம் கூட்டுறவு சங்கத்தின் மீது நெல்லை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதத்தில் குத்தகை பணத்தை கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதன் பின்பும் குத்தகை பணம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வரை ரூ.3½ கோடி பாக்கி உள்ளது.
எனவே கூட்டுறவு சங்கத்திடம் இருந்து நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று வருவாய் நீதிமன்ற தனி துணை கலெக்டர் தமிழரசி கடந்த 4-ந் தேதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று செங்கோட்டை மண்டல துணை தாசில்தார் குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான கோமதி மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து நிலத்தை மீட்டனர்.