மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம் மீட்பு
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 1½ ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 1½ ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. அந்த நிலத்தில் இருந்து வரும் வருமானம் மூலம் கோவில் பணிகளை மேற்கொள்ள பலர் கோவிலுக்கு நிலங்களை எழுதி வைத்துள்ளனர். அவ்வாறு ராமநாதபுரம் அரசரின் திவானாக இருந்த சூறாவளி சுப்பைய்யர் என்பவரின் மகனும் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியாக இருந்தவர் சுப்ரமணிய அய்யர். இவர் தந்தையின் பெயரால் பல்வேறு சொத்துக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சேவைகளை செய்வதற்காக எழுதி வைத்தார்.
இந்த சேவைகளை நடத்த 1847-ம் ஆண்டு சூறாவளி சுப்பைய்யர் டிரஸ்ட் என்கிற கட்டளையை ஏற்படுத்தினார். இதனை நிர்வகிக்க சங்கரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவ்வாறு மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள பல ஏக்கர் நிலங்கள் இந்த டிரஸ்ட் மூலம் கோவிலுக்கு சொந்தமானவை. இவற்றை பலர் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பல ஏக்கர் நிலத்தின் பட்டாக்கள் இன்றளவும் கோவில் பெயரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கூறியிருந்தது.
1½ ஏக்கர் நிலம் மீட்பு
அதை தொடர்ந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு எதிரேயும், புதூர் கற்பகநகர் கடைசியில் ஆக்கிரமிப்பு உள்ள நிலத்தை முதற்கட்டமாக மீட்க மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை கோவில் துணை கமிஷனர் அருணாச்சலம் தலைமையில் கோவில் பணியாளர்கள், தாசில்தார், கிராமநிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 4 சென்ட் மற்றும் 49 சென்ட் நிலத்தை மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று பெயர்பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.இதேபோன்று அந்த பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.