தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை; தென்காசி தொகுதியில் பழனி நாடார் வெற்றி உறுதி
ஐகோர்ட்டு உத்தரவுப்படி தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் போட்டியிட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட கூடுதலாக 370 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அதாவது பழனி நாடாருக்கு 89 ஆயிரத்து 315 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 88 ஆயிரத்து 945 வாக்குகளும் கிடைத்தன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் பழனி நாடாரை விட செல்வமோகன்தாஸ் பாண்டியனே 565 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பழனி நாடாருக்கு கூடுதல் வாக்குகள் அதாவது 1,609 வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 674 தபால் வாக்குகளே கிடைத்து இருந்தன.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ணி அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை
இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதற்காக அரசு கருவூலத்தில் இருந்த தபால் வாக்குகள் அடங்கிய பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதவி கலெக்டர் லாவண்யா முன்னிலையில் எடுத்து வரப்பட்டு உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
காலை 10 மணியளவில் தபால் வாக்குகள் இருந்த பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு அதில் இருந்த வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது, தபால் வாக்குகள் போட்டவர்கள் வழங்கிய அதிகாரிகள் கையெழுத்திட்ட 13சி படிவத்தையும் காண்பிக்க வேண்டும் என்று செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வலியுறுத்தினார். ஆனால் அதிகாரிகள் வாக்குப்பதிவு செய்யப்பட்ட படிவத்தை மட்டும் எண்ணலாம் என்று கூறினர். அதற்கு அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவே, வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கலெக்டர் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அங்கு வந்து அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 15 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அனைத்து படிவங்களும் சரிபார்க்கப்பட்டு, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான 2,971 மொத்த தபால் வாக்குகளில் பழனி நாடார் 1,642 வாக்குகள் பெற்றார். செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு 704 வாக்குகள் கிடைத்தன.
இறுதியில் பழனி நாடாருக்கு மொத்தம் 89 ஆயிரத்து 348 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 88 ஆயிரத்து 975 வாக்குகளும் கிடைத்து இருந்தன. இதன்மூலம் 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதாக உதவி கலெக்டர் லாவண்யா அறிவித்தார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 4 துணை சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உள்பட சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.