சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு செய்ய அரசுக்கு பரிந்துரை
விருதுநகரை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்வு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யும் படி நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகரை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்வு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யும் படி நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
36 வார்டுகள்
விருதுநகர் நகராட்சி 6.64 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நிலையில் இந்த நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை கடந்த 2011 கணக்கெடுப்பின்படி 72,144 ஆகும். இந்த நகராட்சி கடந்த 22.5.1998-ல் இருந்து தேர்வுநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கமிஷனர், என்ஜினீயர் உள்பட 147 பணியாளர்கள் உள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் பணியிடம் மட்டும் 145 காலியாக உள்ளது. இதுதவிர நகர அமைப்பு அலுவலர் உள்பட இதர 12 இடங்கள் காலியாக உள்ளது. நகராட்சியின் வருமானம் கடந்த 2019-2020-ம் ஆண்டில் ரூ.26 கோடியே 70 லட்சத்து 97 ஆயிரத்து 788 ஆகவும், 2020- 2021-ல் ரூ.26 கோடியே 78 லட்சத்து 14 ஆயிரத்து 413 ஆகவும், 2021-2022-ல் ரூ.16 கோடியே 55 ஆயிரத்து 494 ஆகவும் உள்ளது.
சிறப்பு நிலை நகராட்சி
இதில் 2021-2022-ம் ஆண்டு வருமானம் மட்டும் தணிக்கை செய்யப்படாததாகும். கடந்த 2021-2022-ல் முந்தைய ஆண்டுகளை விட சுமார் ரூ. 10 கோடி வருவாய் குறைந்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மாவட்ட தலைநகராக உள்ளதால் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திட அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவரின் முன் அனுமதியுடன் நகராட்சி இயக்குனருக்கு அனுப்பியுள்ள இந்த கருத்துரு நகர சபை கூட்டத்தில் ஒப்புதலுக்காக கொண்டு வரப்படுகிறது.