கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35% நிராகரிப்பு ஏன்? - காரணங்கள் வெளியீடு


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35% நிராகரிப்பு ஏன்? - காரணங்கள் வெளியீடு
x

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.06 கோடி(65%) விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாகவும், 56.5 லட்சம்(35%) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் அரசு பணியில் இருப்பவர்கள், அவர்களது குடும்ப தலைவிகள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்களில் உள்ள குடும்ப தலைவிகள் ஆகியோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆண்டிற்கு 3,600 யூனிட்டுக்கும் அதிகமான மின்சாரம் பயன்படுத்துவோர், சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் ஆகியோரின் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட மகளிருக்கு வரும் 15-ந்தேதி குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story