காங்கிரசை கூட்டணியில் இருந்து நீக்கினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயார் -சீமான் பேட்டி


காங்கிரசை கூட்டணியில் இருந்து நீக்கினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயார் -சீமான் பேட்டி
x

தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் காங்கிரசை கூட்டணியில் இருந்து நீக்கினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயார் என கரூரில் சீமான் தெரிவித்தார்.

கரூர்,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். நேர்மையாளர் என்றால் அனைத்தையும் பேச வேண்டும். கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன்.

தேர்தல் பிரசாரத்தின்போது 2 மாதத்தில் கோடநாடு கொலை வழக்கில் விசாரணை செய்து நீதியை கொண்டு வருவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது 2½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

நீட் தேர்வு

நீட் தேர்வை கொண்டு வந்தது இந்தியா கூட்டணிதான். நீட் தேர்வு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வென்றவர் நளினி சிதம்பரம். அந்த கட்சியை ஏன் கூட்டணியில் வைத்து உள்ளீர்கள். கச்சத்தீவை கொடுக்கும்போது முதல்-அமைச்சர் யார்? தொடர்ந்து 18 ஆண்டுகள் இந்திய அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. தான். தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும், கர்நாடகா என வரும்போது இருவரும் மாநில கட்சியாக மாறிவிடுகிறார்கள்.

ஆதரவு

தமிழகத்திற்கு உரிய நதிநீரை பங்கீடு செய்யாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி பங்கீடு இல்லை என முதல்-அமைச்சர் கூறுவாரா? ஆனால் ஜெயலலிதாவாக இருந்தால் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லையென்றால் காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டார்.

கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன். முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யுங்கள். உங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். 40 தொகுதிகளிலும் நான் விலகிக் கொள்கிறேன்.

அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு உள்ளது. ஏன் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஏனென்றால் அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story