ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என தெரிவித்தால் உணவு வழங்கத் தயார் - செல்வப்பெருந்தகை பதிலடி
ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை,
சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்" என்று கூறினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில், "தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.
எப்படி தி.மு.க.வும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீஜெகந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர்.
மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன். ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.
வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.