வாரிசு அரசியலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அமைச்சர் பொன்முடி சவால்
வாரிசு அரசியலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று அமைச்சர் பொன்முடி சவால் விடுத்தார்.
பிறந்தநாள் விழாபொதுக்கூட்டம்
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 100- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லையா?. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என்னுடன் நேருக்கு நேர் வாரிசு அரசியல் பற்றி விவாதிக்க தயாரா? சி.வி.சண்முகத்தின் தந்தை எம்.பி.யாக இருந்தவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் எம்.பி.யாக இருந்தவர் இது எல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?. எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தியது யார்? ஜெயலலிதா எத்தனை ஆண்டுகள் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார்? ஜானகிஅம்மாள் அ.தி.மு.க.வில் எப்போது உறுப்பினராக இணைந்தார்? எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.வை வழி நடத்தியது யார்?
பெண்களுக்கு அதிக திட்டங்கள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடபாடி பழனிசாமியை முல்-அமைச்சராக தேர்வு செய்தது யார்? காலில் விழுந்து முதல்-அமைச்சர் பதவியை எடபாடி பழனிசாமி வாங்கினார் என்பது அனைவருக்கு தெரியும், தி.மு.க. ஆட்சி அமைந்த 1½ ஆண்டில் பெண்களுக்கு அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புசெல்வன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தானம், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன் வரவேற்றார். முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் கண்ணன் நன்றி கூறினார்.