சென்னையில் துப்பு துலங்காத 8 முக்கிய கொலை-கொள்ளை வழக்குகள் மீது மீண்டும் விசாரணை - 3 தனிப்படைகள் அமைத்து கமிஷனர் உத்தரவு
சென்னையில் கடந்த 18 ஆண்டுகளில் நடந்த துப்பு துலங்காத 8 முக்கிய கொலை-கொள்ளை வழக்குகளை, 3 தனிப்படைகள் அமைத்து மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 18 ஆண்டுகளில் 8 முக்கிய கொலை-கொள்ளை வழக்குகள் துப்பு துலங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்றும், அதன் விபரங்களும் என்னிடம் தரப்பட்டது. உடனே அந்த வழக்குளை மீண்டும் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
இதற்காக 3 தனிப்படை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் இந்த வழக்குகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் நான் விசாரணை நடத்துவேன் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தனது பேட்டியில் தெரிவித்தார். துப்பு துலங்காத 8 வழக்குகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
இந்த வழக்குகளில் 7 வழக்குகளில் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் பெண்களே. 8-வது வழக்கில் கூட பெண் ஒருவர் தனது கணவருடன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு-1:- 2004-ம் ஆண்டு சென்னை கே.கே.நகர், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்த மத்திய அரசு அதிகாரியின் மனைவி பரிமளா மிகவும் கொடூரமாக, அவரது பிறப்புறுப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கத்தியும் பிறப்புறுப்பில் அப்படியே இருந்தது. நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறினாலும், கொலைக்கான நோக்கம் வேறு காரணமாக இருக்கலாம் என்று அப்போது சொல்லப்பட்டது. உறவினர்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்த வழக்கில் துப்பு துலக்க முடியவில்லை என்று போலீசார் அப்போது தெரிவித்தனர்.
வழக்கு-2:- கடந்த 2006-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் வீட்டில் தனியாக வசித்த ஜேக்கப் அவரது மனைவி மோனி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் ஜேக்கப்பின் காரை எடுத்து சென்று விட்டனர். கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப்பையும், அவரது மனைவியையும் கொன்றவர்களை நெருங்கி விட்டோம், என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் குற்றவாளிகளை பிடிக்காமல், கிண்டி போலீசார் வழக்கை கிடப்பில் போட்டு விட்டனர்.
வழக்கு-3:- கடந்த 2011-அக்டாபர் மாதம் சென்னை வடபழனி பாரதீஸ்வரர் காலனியில் வசித்த பரமேஸ்வரி (வயது 65) என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டு, 35 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த வழக்கும் துப்பு துலக்கப்படாமல், வடபழனி போலீசாரால் கைவிடப்பட்டது.
வழக்கு-4:- 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை நெசப்பாக்கத்தில் வசித்த பைனான்சியர் லோகநாதனின் மனைவி ரஞ்சிதம் கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். நிர்வாண கோலத்தில் கிடந்த அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலி கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கே.கே.நகர் போலீசார் குற்றவாளியை பிடிக்கவில்லை.
வழக்கு-5:- 2013 ஏப்ரல் மாத்தில் இந்த கொலை-கொள்ளை அரங்கேற்றப்பட்டது. பெரம்பூர் அன்பழகன் நகரில் வசித்த ரெயில்வே அதிகாரி கிருஷ்ணகுமாரின் மனைவி சுமதி கொல்லப்பட்டார். 4 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கும் புதை குழிக்குள் போனது. இதுவரை துப்பு துலங்கவில்லை.
வழக்கு-6:- இந்த வழக்கில் குற்றவாளி யார், என்று தெரிந்தும் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. 2015-ம் ஆண்டு அருணா என்ற இளம்பெண்ணை காதலித்த தினேஷ் என்ற வாலிபர், நம்மாழ்வார் பேட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்து அருணாவை கொலை செய்து விட்டார். அருணாவின் பிணத்தை பாலிதின் பையில் சுற்றி தனது காரில் ஏற்றி வைத்திருந்தார் வாலிபர் தினேஷ். தினேசின் தந்தை மத்திய அரசு அதிகாரி ஆவார். தலைமறைவான தினேசை பிடிக்க போலீசார் எடுத்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. போலீசார் இந்த முறை கண்டிப்பாக தினேசை பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வழக்கு-7:- 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சாரதா (70) என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளை போனது. கேரளாவைச் சேர்ந்த சாரதா கொலை வழக்கில் எழும்பூர் போலீசார் குற்றவாளியை நெருங்கி விட்டதாக சொன்னார்கள். ஆனால் பிடிக்கவில்லை. இந்த வழக்கும் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.
வழக்கு-8:- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்த சீதாலட்சுமி (70) என்ற மூதாட்டியும் கொலை செய்யப்பட்டு, 30 பவுன் நகைகள் கொள்ளை போனது. எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் இந்த வழக்கை விசாரித்தார்கள். இதுவரை இந்த வழக்கில் குற்றவாளி கைதாகவில்லை. இதுபோல் நடந்துள்ள கொடூர கொலை குற்றங்களில் குற்றவாளிகளை பிடிக்க தற்போது புதிய புலனாய்வு அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்கு வேலை கொடுக்கும் விதமாக இந்த 8 கொலை வழக்குகளும் இந்த அமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த அமைப்புக்கு உதவிகரமாக செயல்படுவார்கள்.
மேற்கண்ட 8 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டால், கடந்த 1992-93 களில் சென்னை அமைந்தகரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கையும் போலீசார் கையில் எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசியல் சாயம் பூசப்பட்ட இந்த வழக்கு போலீசாருக்கு மிகவும் சவாலாக விளங்கியது. இந்த 4 பேர் கொலை வழக்கில் துப்பு துலக்கி விட்டால், சென்னை போலீசுக்கு ஈடு, இணையே இல்லை. இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்ற நிலையில் ஒதுங்கி உள்ளனர். சிலர் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தினால், இந்த வழக்கில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் வரலாம்.