ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், கொரோனா நிவாரண பொருட்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கடந்த 7-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றும் 3-வது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் 726 ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் ரேஷன் கடை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கோபிநாத், பொருளாளர் ரஷீத் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் வானூரில் மாவட்ட இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் வட்ட தலைவர் முருகதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.