சிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது


சிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது
x

கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை


கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சிலிண்டரை வினியோகிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கியாஸ் சிலிண்டர்

கிராமம், நகர்ப்புறம் என்று நாளுக்குநாள் சமையல் கியாஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வீட்டுக்குவீடு இன்றி யாமையாத பொருட்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இல்லத்தரசிகள் சமையல் வேலையை விரைந்து முடிக்க கியாஸ் சிலிண்டர் பெரும் பங்கு வகித்தாலும் அதன் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்வது பொதுமக்களை விழிபிதுங்க செய்கிறது.

மாத பட்ஜெட்டில் இது ஒரு சுமையாக இருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்ய தனியாக கட்டணம் வசூலிப்பது வேதனை அளிக்கிறது என்று பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சிவகங்கை கயல்விழி பாண்டியன்: தற்போது கியாஸ் சிலிண்டர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு பெறப்படுகிறது. சிலிண்டர் பதிவு செய்யும்போது பதிவு எண் பதிவு செய்யப்பட்ட சிலிண்டர் எப்பொழுது கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கூடுதல் கட்டணம்

அதன் பின்னர் சிலிண்டர் அனுப்பும்போது அந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டருக் கான விலை சிலிண்டர் எப்போது வாடிக்கையாளருக்கு கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள் குறிப்பிட்டு மற்றொரு குறுந்த தகவலும் வருகிறது. அதில் சிலிண்டர் கட்டணமாக ரூ.1103 என்று தெரிவிக்கப் படுகிறது. ஆனால் சிலிண்டர் கொண்டு வந்து வீடுகளில் இறக்குபவர்கள் அந்த தொகையை விட கூடுதலாக 47 ரூபாய் வரை ரூ.1150 வசூலிக்கின்றனர்.

ஒவ்வொரு சிலிண்டருக்கும் இதேபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலிண்டர் போடுபவர் ஒரு நாளைக்கு 100 வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வழங்கி னால் அவருக்கு ரூ.4700 வரை கிடைக்கிறது. இதுபோன்று வசூலிப்பதை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் சிலிண்டர் நிறுவனங்கள் எடுப்பதில்லை. அவ்வாறு வழங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை கூடுதல் கட்டணமாக சிலிண்டர் நிறுவனங்களே அறிவிக்க வேண்டும்.

டெலிவரி கட்டணம்

ராமநாதபுரம் ஜெயலட்சுமி: எனது வீட்டில் சமையல் கியாஸ் இணைப்பு உள்ளது. சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,200-ஐ தாண்டி விட்டது. ஆனால் சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரூ.50 ஆக குறைத்து விட்டனர். சிலிண்டர் விற்பனை டீலர் வழங்கும் பில்லில் ரூ.1,140 என குறிப்பிட்டு உள்ளது. ஆனால், வாங்கும் தொகை ரூ.1,200 ஆக உள்ளது.

நகர் பகுதியாக இருந்தால் பில்லை விட கூடுதலாக ரூ.40-ம், புறநகர் பகுதியாக இருந்தால், கூடுதலாக ரூ.60-ம், கிராம பகுதியாக இருந்தால் ரூ.70-ம் கூடுதலாக வசூலிக்கின்றனர். இதுகுறித்து கேட்டால் டெலிவரி கட்டணம் என்கின்றனர். காலம் காலமாக நடந்து வரும் இந்த முறையற்ற கட்டண வசூல் குறித்து ஏதாவது கேட்டால் சிலிண்டர் வழங்க மறுத்து விடுகிறார்கள். நமக்கு ஏன் வம்பு என்று யாரும் கேட்பதில்லை.

இது குறித்து உரிய அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இது முறையற்ற வசூல் என தெரிய வந்தால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கச்சிமடம் அருகே அரியாங்குண்டு ஆரோக்கிய நிர்மலா:

450 ரூபாய் இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,100-ஐ கடந்துவிட்டது. இது மிக பெரிய விலை உயர்வு. இந்த விலை உயர்வால் பெண்கள் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் அதிகம் கஷ்டப்பட்டு வருகின்றனர். கியாஸ் விலை உயர்வை குறைக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.

நடவடிக்கை தேவை

இது ஒரு புறம் இருக்க கியாஸ் சிலிண்டர்களை வினியோகிக்கும் பணிகளுக்கு கூடுதலாக பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு வரும் தொழிலாளர்கள் கூடுதலாக ரூ.70 வரை பணமும் கேட்கின்றனர். அதையும் கொடுக்க வேண்டி உள்ளது. மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அரசாங்கம் கியாஸ் விலை உயர்வை குறைக்கவும், கூடுதலாக தொழிலாளர்களை நியமிக்கவும், கியாஸ் சிலிண்டர் வீடுகளுக்கு விநியோகிப்பவர்கள் கூடுதலாக பணம் கேட் பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் லதா கூறியதாவது: கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறோம்.இதற்கிடையில் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு வருபவர்கள் தொடர்ந்து கூடுதலாக ரூ.50 பணம் கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர். கூடுதல் பணம் தர முடியாது என்று சொன்னாலும் அதை கேட்பது கிடையாது. எனவே கியாஸ் சிலிண்டரின் விலையை குறைப்பதற்கும், சிலிண்டரை வினியோகிப்பதற்கு கூடுதல் பணம் கேட்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உண்மை மனநிலை

ராமநாதபுரம் வ.உ.சி நகர் ஈஸ்வரி: கியாஸ் சிலிண்டரின் விலையை கேட்டாலே விழிபிதுங்குகிறது. அதுதான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களின் உண்மையான மனநிலை. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மட்டுமல்லாமல் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டரை கொண்டு வருபவர்களும் ரூ. 50 பணம் கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர். இதையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதே நிலைமை நீடித்தால் கியாஸ் சிலிண்டர் பயன் படுத்துவதை கைவிட்டு மீண்டும் விறகு மற்றும் மண்எண்ணெய் அடுப்புகளை பயன்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story