ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயிலை வேறு மார்க்கத்தில் இயக்கக்கூடாது-புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை
ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயிலை வேறு மார்க்கத்தில் இயக்கக்கூடாது என புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம்- செகந்திராபாத்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் புதுக்கோட்டையிலிருந்து தெலுங்கானா மாநிலமான குண்டூர், செகந்திராபாத் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே நேரடி ரெயில் சேவையாகும். இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை வழியாக ராமேசுவரம்-செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரெயில் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டை வழியாக இயங்கும் செகந்திராபாத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவை ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் ரத்து செய்துவிட்டு அதே ரெயில் எண்ணுடன் ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி முதல் காரைக்குடி-திருவாரூர் வழியாக இயக்க அட்டவணை வெளியாகியுள்ளது. இதனால் செகந்திராபாத் ரெயிலை வேறுபாதைக்கு இயக்கும் முடிவை தென்னக ரெயில்வே உடனடியாக கைவிடவேண்டும். மேலும் தற்போது இயங்கும் புதுக்கோட்டை வழியாக தொடர்ந்து இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வேக்கு புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும் ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.