ரூ.120 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேசுவரம் ரெயில் நிலையம்


ரூ.120 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேசுவரம் ரெயில் நிலையம்
x

ரூ.120 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேசுவரம் ரெயில் நிலையம்

ராமநாதபுரம்

மதுரை

நாட்டில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

மதுரை-ராமேசுவரம்

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட தமிழக, கேரள ரெயில் நிலையங்களும் இந்த திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. மதுரை ரெயில்வே கோட்டத்தில் மதுரை மற்றும் ராமேசுவரம் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

மதுரை ரெயில் நிலையத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.300 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. அதேபோல, ராமேசுவரம் ரெயில் நிலையமும் சுமார் ரூ.120 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இன்று தொடங்கி வைப்பு

இந்த பணிகளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதற்காக அதிகாரிகள் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த திட்டத்தின் கீழ், ராமேசுவரம் ரெயில் நிலையம் 2 அடுக்கு மாடி கட்டிடமாக மாற உள்ளது. இதில் தரைத்தளம் மற்றும் 2-வது தளத்தில் பயணிகளுக்கான காத்திருக்கும் அறை அமைக்கப்படுகிறது.

4-வது மற்றும் 5-வது பிளாட்பாரத்துக்கு செல்லும் வகையில் லிப்ட் மற்றும் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

ராமேசுவரம் ேகாவில் கோபுரம்

தரைத்தளத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஆண், பெண் பயணிகளுக்கான தனித்தனி ஓய்வறை கட்டப்படுகிறது. மதுரை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளும் பணிகளை போல, ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கும், ரெயில்களில் வந்திறங்கி வெளியே செல்லும் பயணிகளுக்கும் தனித்தனி பாதை அமைக்கப்படுகிறது. இதனால் பயணிகள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்படும். ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதி ராமநாதசுவாமி கோவில் கோபுரம் போல அமைக்கப்படுகிறது.

ரெயில் நிலைய வளாகத்தில் ராமேசுவரம் கோவிலில் இருக்கும் தூண்களை போல நிறைய தூண்கள் அமைக்கப்படும். இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களுக்கு தனித்தனி நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. பஸ்கள் வந்து செல்ல தனிப்பாதையும் அமைகிறது. ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளை ஏற்றி, இறக்கும் வாகனங்களுக்கு தனி பாதையும் அமைக்கப்படுகிறது. அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் காத்திருக்கும் அறை, லிப்டு, தானியங்கி நகரும் படிக்கட்டு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது 1-வது பிளாட்பாரத்தில் உள்ள காத்திருக்கும் அறை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களையும் இணைக்கும் வகையில் 12 மீட்டர் அகலம் கொண்ட நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

தோட்டத்துடன் கூடிய ஓட்டல்

ரெயில் நிலையத்தின் மேல் தளத்தில், அதாவது 2-வது தளத்தில் மொட்டை மாடி வணிக பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்படுகிறது. இந்த வடிவமைப்பானது, தோட்டத்துடன் கூடிய ஓட்டல் அமைக்கும் வகையில் கட்டப்படுகிறது. தற்போது உள்ள ரெயில்வே அலுவலகங்கள் இடிக்கப்பட்டு வேறு பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. புதிய பார்சல் அலுவலகம் வடக்கு பகுதியில் தனியாக கட்டப்படுகிறது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் 18 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மதுரை ரெயில்வே கட்டுமானப்பிரிவால் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story