ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது


ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் படகு பழுதாகியதால் தவித்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நடுக்கடலில் படகு பழுதாகியதால் தவித்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

என்ஜின் பழுது

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் பல படகுகள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகும் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது.

இந்த படகில் அந்தோணி, சேசுராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், அந்தோணிபிரபு ஆகிய 9 மீனவர்கள் இருந்தனர். அப்போது திடீரென அந்த படகின் என்ஜின் பழுதாகியதாக தெரிகிறது. அந்த என்ஜினை மீனவர்கள் சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் அந்த மீனவர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். இதனிடையே காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக பழுதான படகானது, இலங்கை பகுதியை ஒட்டிய நெடுந்தீவு கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

9 மீனவர்கள் கைது

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து 9 மீனவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். ராமேசுவரத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகு ஏற்கனவே இலங்கை படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதற்கு மறுநாளே இந்த சிறைபிடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

விடுவிக்க வலியுறுத்தல்

இதுெதாடர்பாக ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, பழுதாகி நின்ற படகு காற்றின் வேகத்தால் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினர் அந்த படகையும், 9 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இது மனிதாபிமானம் அற்ற செயல். 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருக்கும் நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொந்தரவு செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இல்லாமல் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழிலை மேற்கொள்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்" என்றனர்.


Related Tags :
Next Story