ராமநாதபுரத்தில் மடிக்கணினிகள் காணாமல் போன வழக்கு - மீண்டும் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து லேப்டாப் ஐ.பி. முகவரியை வைத்து திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமநாதபுரத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் விஸ்வநாதன். இவர் கடலாடி அரசு பள்ளியில் ஓவிய ஆசரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியைக்கு தொந்தரவு அளித்ததின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பணி இடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தன்னை ஓவிய ஆசிரியராக பணியமர்த்த அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
"சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கடலாடி பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய மடிக்கணினியில் 20 திருடப்பட்ட சம்பவத்தில் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் போலீசார் அதனை முறையாக விசாரிக்காமல் வழக்கை முடித்து வைத்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து விஸ்வநாதன் 2019-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றும் ஆசிரியைக்கு தொந்தரவு தந்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் டி.ஜி.பி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழகம் முழுவதும் கடந்த 2012 முதல் 2021 வரையில் 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 69 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 116 மடிக்கணினிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பல வழக்குகளில் மாயமான மடி கணினிகள் கண்டுபிடிக்கபடவில்லை.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்த நீதிபதி, ஒவ்வொரு மடிக்கணிலும் அதன் ஐ.பி. முகவரி மற்றும் மேக் நம்பர் பதியப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் இன்னும் அதனை கண்டறியாதது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன மடி கணினி வழக்குகளை திரும்ப விசாரணை செய்ய மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து லேப்டாப் ஐ.பி. முகவரி மற்றும் மேக் நம்பர்களை வைத்து யார் திருடியது? என்பதை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்" என ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.