தண்ணீரின்றி வறண்ட ராமநாதபுரம் பெரியகண்மாய்
ராமநாதபுரம் பெரிய கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பொய்த்துப்போன மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் பெய்யும் மழையால்தான் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் மற்றும் ஊருணிகளும் நிரம்புகின்றன. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தற்போதுவரை தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்து வருகின்றன.
இதனிடையே கடந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு பெய்த மழையால் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது. கண்மாய் முழுவதுமாக நிரம்பிய நிலையில் அங்கிருந்து ராமநாதபுரத்தில் உள்ள கண்மாய், ஊருணிகளுக்கும் நீர் திறந்து விடப்பட்டது. மேலும் பல ஆயிரம் கன அடி நீர் கடலுக்கும் திருப்பிவிடப்பட்டு வீணாக கடலில் கலந்தது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சீசனில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யாததாலும், வைகையிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இல்லாததாலும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் தற்போது ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பருவமழை சீசனில் அதிக அளவு மழை பெய்தால் மட்டுமே பெரிய கண்மாய் நிரம்பும்.
அதோடு மட்டுமல்லாமல் ராமநாதபுரம் பகுதியை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள நெல் விவசாயம் காப்பாற்றப்படும் என விவசாயிகள் கூறினர்.