ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை பிரபல ரவுடி வாளால் வெட்டி படுகாயப்படுத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் உள்ளே செல்லும் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீதிபதிகள், ஊழியர்கள் செல்வதற்கு ஒரு வழியும் மற்றும் விசாரணை கைதிகள், விசாரணைக்கு வருபவர்கள் மற்றொரு வழியிலும் செல்வதற்கு தனித்தனியே வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நின்று ஒவ்வொருவரையும் துருவி துருவி சோதனையிட்ட பின்னரே அனுமதித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக நுழைவு வாயில் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை தெளித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வரும் என்றும் கூறப்படுகிறது.