ராமஜெயம் கொலை வழக்கு: இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை


ராமஜெயம் கொலை வழக்கு: இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை
x

ராமஜெயம் கொலை வழக்கில் இன்று முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.

திருச்சி,

திருச்சியைச் சேர்ந்த அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி சிபிஐ வரை பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட அனுமதிகேட்டு திருச்சி ஜே எம் 6 நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுசெய்து அவர்களில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.

அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் , நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த கடிதத்தின்பேரில், ஜன.17-ம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, இன்று முதல் நாளொன்றுக்கு 3 பேர் வீதம் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றனர்.


Next Story