ஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்


ஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்
x

இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அதேபோல், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்து அவியூரில் செயல்படு வரும் தனியார் கல் உடைக்கும் ஆலைக்கு வெடிமருந்தை இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்காடு பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி அவியூர் கல்குவாரியை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் உணர்வுகளை மதித்து குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story