ரம்ஜான் பண்டிகை; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து


ரம்ஜான் பண்டிகை; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 10 April 2024 1:33 PM IST (Updated: 10 April 2024 6:07 PM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.

சென்னை

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. புனித ரமலான் மாதத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, மாதத்தின் இறுதியில் பண்டிகையை கொண்டாடுவது தனிச்சிறப்பு. குறிப்பாக இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள், நோன்பு, உபசரிப்பு, உதவிகள் ஆகியவற்றை மேற்கொள்வதால் அருள் பெற்று, நன்மைகள் பெற்று வாழ்வில் மேன்மையடைகிறார்கள்.

ரமலான் பண்டிகையினால் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவுகிறது. நம் இந்திய திருநாட்டில் இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆற்றி வரும் உயர் பணி பாராட்டுக்குரியது. அதாவது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது.

இஸ்லாமியர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும், அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படுகிறது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கின்ற வளர்ச்சித் திட்டங்களை உறுதிப்படுத்தும் கட்சியாக த.மா.கா தொடர்ந்து செயல்படும்.

மேலும் இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். ரமலான் பண்டிகையை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இஸ்லாமிய சகோதர சசோதரிகளுக்கு இறைவன் துணை நிற்க வேண்டி, வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story