விநாயகர் சதுர்த்தி மதநல்லிணக்க ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி மதநல்லிணக்க ஊர்வலம் நடந்தது.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வெட்டன்மனை, தொத்தன் மகன்வாடி, நாச்சியபுரம், கல்பார், சின்ன ஏர்வாடி ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபாட்டுக்குபின், மேள தாளங்கள் முழங்க வெட்டன்மனை செல்வ விநாயகர் கோவிலில் இருந்து சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது ஊர்வலம் ஏர்வாடி தர்காவை கடந்து சென்ற போது ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை பா.ஜ.க பெருங்கோட்ட பா.ஜ.க. அமைப்பு பொருளாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழக்கரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சின்ன ஏர்வாடி கடற்கரையில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.