பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும் புதிய போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேச்சு
பேசுவதை விட செயலில் காட்டுவதே தனக்கு பிடிக்கும் என கடலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள ராஜாராம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன், சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பதற்காக நேற்று கடலூர் வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்ததும், போலீசார் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர், பேசுவதை விட செயலில் காட்டுவதே தனக்கு பிடிக்கும் என்றும், எனது செயல்பாடுகளை விரைவில் பார்ப்பீர்கள் என்றும் கூறினார்.
முதல் துணை கமிஷனர்
புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள ராஜாராம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு திருப்பூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றார். அதன் பிறகு 2013-2014-ம் ஆண்டுகளில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தொடர்ந்து திருநெல்வேலி, சேரன்மகாதேவி, மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ராஜாராம், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பி.யாக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கடந்த ஆண்டு சென்னை காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு முதல் துணை கமிஷனராக ராஜாராம் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.