தஞ்சை பெரிய கோவிலில், மங்கள இசையுடன் தொடங்கியது: மாமன்னன் ராஜராஜ சோழன் 1037-வது சதய விழா
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது.
ராஜராஜ சோழன் சதய விழா
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 1 நாள் மட்டும் பெரிய கோவில் வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது.
மங்கள இசையுடன் தொடக்கம்
இந்த ஆண்டு சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சதய விழா நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சதய விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தான் என்பது பெருமையானது.
ஒரு மன்னன், மக்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டால், காலத்தினால் யாராலும் மறக்க முடியாது என்பதற்கு ராஜராஜ சோழன்தான் சான்று. இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி.
படையை முன்னின்று நடத்தியவர்
மேலும் கண்ணன் ஆரூரான் என்பவர், ராஜராஜ சோழனின் பணியாளர் ஒருவர் தான் வெட்டிய குளத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகையை அன்பை பெற்றவர். காலத்தினால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தார்.
ஒரு மன்னன் போரில் படைக்கு பின் இருந்து வழிநடத்தாமல், படைக்கு முன்னின்று வழிநடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பது கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டிமன்றம்
அதனைத்தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
தொடக்க விழாவில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரிய நாராயணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெருவுடையார்-பெரியநாயகிக்கு பேரபிஷேகம்
இன்று(வியாழக்கிழமை) தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
விழாக்கோலம்
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.