கனமழை பெய்துவரும் நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குகிறதா? வடிந்துவிடுகிறதா? பொதுமக்கள் கருத்து
கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் மழைநீர் தேங்குகிறதா? வடிகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பருவமழை
தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை ஆகும். இது, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 3 மாதங்களில், தன்னால் இயன்ற அளவுக்கு கொட்டி தீர்த்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே, வெள்ள நீர் தங்குதடையின்றி வடிந்து செல்லும் வகையில், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள், புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு, மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் முடிவுறுவதற்காக 2024-ம் ஆண்டு வரை வெவ்வேறு காலக்கட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
வடிகால் பணி
சென்னையின் உள் பகுதிகளில், ரூ.1,000 கோடி செலவில் சுமார் 170 கி.மீ. நீளம் அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதத்துக்குள் அந்த பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று மாநகராட்சி இலக்காக கொண்டு செயல்படுகிறது. இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் சுமார் 1,400 கி.மீ. நீளத்திற்கு வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் பணிகளுக்காக கடந்த சில நாட்களாக சென்னைவாசிகள் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
இரவும், பகலுமாக முழுவீச்சில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு பின்னராவது, இந்த மழைக்காலத்தில் நிம்மதியாக இருக்கலாமா? என்று பெரும்பாலான சென்னைவாசிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு விடை கிடைத்தது. பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழை நீர், சீரான இடைவெளியில் வடிந்தவாறு இருந்தது. இதனால் வழக்கமாக குளம்போல காணப்படும் பிரதான சாலைகள் அனைத்தும் வெள்ள நீர் வடிந்து, காய்ந்த நிலையில் காணப்பட்டது.
தேங்கவில்லை
சென்னை வரைபடத்தில் உள்ள அத்தனை பகுதிகளிலும் பாரபட்சமின்றி நேற்று மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், புரசைவாக்கம், திருவான்மியூர், சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், வேப்பேரி, சென்னை சென்டிரல் வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மழையின்போது தேங்கிய அளவுக்கு மழைநீர் பிரதான சாலைகளில் தேங்கவில்லை.
சமீபத்தில் செய்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளினால் வெள்ள நீர் வேகமாகவும், உடனடியாகவும் வடிந்தது. இதுதவிர மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் தேங்கிய இடத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இதற்கிடையே ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியது. அதுவும் சீரான இடைவெளியில் அகற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கருத்து
கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் மழை நீர் தேங்குகிறதா? அல்லது வடிந்துவிடுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
மனநிறைவு
திருவான்மியூரை சேர்ந்த மருந்து கடை ஊழியர் வி.சதீஷ்குமார்:-நான் தொழில் நிமித்தமாக பட்டினப்பாக்கம், அடையாறு, கொட்டிவாக்கம், பெசன்ட்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவேன். முன்பு அந்த பகுதிகளில் நிறைய தண்ணீர் தேங்கி நிற்கும். பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ள நீர் கிடக்கும். ஆனால் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்த நிலையில், இப்போது தண்ணீர் தேங்காத நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் எளிதாக சென்று வரமுடிகிறது. மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது சிரமமாக இருந்ததே என்று நினைத்தவர்கள், அதனுடைய பயனை இப்போது அடைய முடிகிறது என்று மனநிறைவு கொள்கிறார்கள்.
முழுமையாக செய்யவில்லை
வடபழனியை சேர்ந்த மாளவிகா:- வடபழனியில் உள்ள ஆற்காடு சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மெட்ரோ ரெயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுவாக கூறுகிறார்கள். அது ஒரு புறம் இருந்தாலும், மழை நீர் ஆற்காடு சாலையில் ஒரு சில இடங்களில் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கவேண்டியது இருக்கிறது. மழை வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால், நல்ல பலன் கிடைத்து இருக்கும்.
மேட்லி சுரங்கப்பாதை
தியாகராயநகரை சேர்ந்த தமிழ்மணி:- ஒரு மணி நேரம் விடாமல் மழை பெய்தாலே மேட்லி சுரங்கப்பாதை நிரம்பிவிடும். ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறத்துக்கு போக்குவரத்து செல்ல முடியாது. வெள்ள நீர் வடியாததால், பாலம் பெரும்பாலும் மூடியே கிடக்கும். ஆனால் இப்போது, மாநகராட்சியும், அரசும் இணைந்து மழைநீர் வடிகால் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதனால் சுரங்கப்பாதையில் மழை நீர் ஒரு சொட்டு கூட தேங்கவில்லை. மழை நீர் வேகமாக வடிந்ததால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆச்சரியம்
சாந்தோமில் ஆட்டோ ஓட்டி வரும் புகழேந்தி:- தாழ்வான பகுதி என்பதால், ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாந்தோம் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கிவிடும். வாகனங்களும் நத்தை வேகத்திலே ஊர்ந்து செல்லும். ஆனால் இந்த ஆண்டு மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகள் சீரான இடைவெளியில் நல்ல முறையில் செய்யப்பட்டன. இதனால் வெள்ள நீர் தேங்கவில்லை. இவ்வளவு மழை பெய்தும், வெள்ளம் தேங்காத ஒரு ஆச்சரியத்தை நான் பார்த்ததே இல்லை. அரசு சிறப்பான நடவடிக்கையை கையாண்டிருக்கிறது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்த யாஸ்மின்:- கிண்டி மடுவின்கரை, மசூதி காலனி, புது தெரு, பிள்ளையார் கோவில் தெரு, வண்டிக்காரன் தெரு, நேதாஜி சாலை ஆகிய பகுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வார காலம் கஷ்டமாக இருக்கும். தற்போது மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டதால் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத நிலை உள்ளது. தற்போதுதான் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது போன்று உள்ளது. 20 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
மழைநீர் கால்வாய்
அய்யப்பன் தாங்கலை சேர்ந்த செல்லதுரை:- கடந்த முறை பெய்த மழையின்போது பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி மிகவும் அவதியுற்றோம். கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழைக்கு எங்களது பகுதியில் மழை நீர் அதிக அளவில் தேங்கவில்லை. குறிப்பாக மழை நீர் கால்வாய் அமைத்ததன் காரணமாக மழை நீர் தேக்கம் குறைந்துள்ளது. விடுபட்டுள்ள மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்துவிட்டால், அடுத்த மழைக்கெல்லாம் மழை நீர் அதிக அளவில் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
சேறும், சகதியும்...
திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்த கமலா:- நாங்கள் வசிக்கும் சிவசக்தி நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. எங்கள் தெரு வழியாக முழங்கால் அளவு மழை நீர் செல்கிறது. இதனால் சின்ன குழந்தைகளை கடைக்கு கூட அனுப்ப முடியாது. மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் பகுதியில் சேறும், சகதியுமாக கிடக்கிறது. அம்பேத்கர் நகர், அண்ணாமலை நகர் போன்ற பகுதியில் இருந்து வரும் வெள்ள நீர் இந்த வழியாகத்தான் சென்று கால்வாயில் கலக்கும். அதனால் மழை பெய்து 3 மாதங்கள் ஆனாலும் எங்கள் பகுதியில் சேறும், சகதியுமாகத்தான் இருக்கும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, மழைநீர் தெருக்களில் தேங்குவதை தடுக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்வு
பூந்தமல்லியை சேர்ந்த வினோத்குமார்:- மழை பெய்தால் பூந்தமல்லி பகுதிக்கு உட்பட்ட குமணன்சாவடி அம்மன் கோவில் தெரு பெரிதும் பாதிக்கப்படும். மழை பெய்யும் போதெல்லாம் குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு கழிவு நீர் புகுந்துவிடும். கடந்த முறை எங்கள் பகுதியில் இருந்த போலீஸ் குடியிருப்புகள், வீடுகளில் மழை நீர் முதல் தளம் வரையிலும் தேங்கியது. தற்போது மழை நீர் கால்வாய் அமைத்ததால் மழை வெள்ள பாதிப்பு பெரிதும் குறைந்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளனர். எனினும், ஆங்காங்கே மழை நீர் கால்வாய் இணைப்புகள் இன்னும் முடிவு பெறாமல் உள்ளது. அதனையும் முடித்து விட்டால் மழை வெள்ள பாதிப்பில் நாங்கள் முற்றிலும் தப்பிவிடுவோம். கடந்த 20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு இப்போது தீர்வு கிடைத்துள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.