கூடலூர் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர்


கூடலூர் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த மழைநீர்
x
தினத்தந்தி 26 Oct 2023 2:30 AM IST (Updated: 26 Oct 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

தேனி

கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ள கல்லுடைச்சான்பாறை, புதுக்குளம், குறுக்குவழிகாடு, மந்தை வெளிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் அவரை, மொச்சை, தட்டைப்பயிறு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அதேபோல் வாழை, தென்னை, திராட்சை, முட்டைக்கோஸ், மிளகாய் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் மழை பெய்யும்போது, மழைநீர் அங்குள்ள ஓடைகள் வழியாக குளங்களுக்குள் சென்றடையும். ஆனால் தற்போது அந்த ஓடைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்த மழைநீர், ஓடைகளில் செல்ல முடியாமல் அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது. மேலும் விளை நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு முட்டைக்கோஸ், அவரை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story