குழாய், கேபிள்களை அகற்றாமல் மழைநீர் வாய்க்கால் அமைப்பு
கடலூர் சாவடியில் குழாய், கேபிள்களை அகற்றாமல் மழைநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் சாவடியில் ரட்சகர் நகர், அண்ணாமலை நகர், சாந்தி நகர், கண்ணையா நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டுள்ள நகர்கள் உள்ளன. கடலூர் சாவடி மெயின்ரோட்டில் இருந்து அப்பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வரும் அந்த சாலையில் உள்ள வடிகாலின் குறுக்கே பாலம் (கல்வெட்டு) கட்டுவதற்கு பதிலாக, சாதாரண சிலாப்புகளை வாய்க்காலின் குறுக்கே போட்டு பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிகள் தடுத்து நிறுத்தம்
மேலும் வடிகால் தரமின்றி அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது வடிகாலின் குறுக்கே குடிநீர் குழாய், கேபிள்கள் செல்கின்றன. அவற்றை அகற்றாமல் போட்டுள்ளதால் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் அடித்து வரப்படும் செடி, கொடிகள் அதில் சிக்கி தண்ணீர் செல்ல வழியின்றி ஊருக்குள் புகும் நிலை ஏற்படும் என கருதிய அப்பகுதி மக்கள் நேற்று திரண்டு வந்து வடிகால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள், சிமெண்டு சிலாப் கொண்டு பாலம் அமைத்தால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது பாரம் தாங்காமல் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உருவாகும். மேலும் வாகனங்களில் எடையை தாங்கக்கூடிய திறன் இல்லாத சாதாரண கம்பிகளையும், தரற்ற கான்கிரீட் மூலம் கட்டப்படுவதால் உடைந்து சேதம் அடையும் நிலை ஏற்படும் என்று கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதனால் ஊழியர்கள், வடிகால் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர், அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தரமின்றி வாய்க்கால் அமைப்பதால் மக்களின் வரிப்பணம் முற்றிலும் வீணாகி உள்ளது. அதனால் வடிகால் வாய்க்கால் மற்றும் வாய்க்காலின் குறுக்கே கட்டப்படும் பாலத்தை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.