சென்னையில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் மழை
சென்னையில் நள்ளிரவு 11 மணியளவில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
சென்னை
தமிழகத்திலேயே சென்னையில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பகல் வேளையில் வெயில் கடுமையாக கொளுத்துவதும், மாலை வேளையில் மழை பெய்வதும் என்று வானிலை மாற்றம் நிலவியது. பகல் வேளையில் வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் நள்ளிரவு 11 மணியளவில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. சில நிமிடங்கள் நீடித்த இந்த மழை, பகலில் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. சேத்துப்பட்டு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம், டிடிகே சாலை, மதுரவாயல், அடையாறு,கோயம்பேடு, அம்பத்தூர், அமைந்தகரை, வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை வளசரவாக்கம், கோடம்பாக்கம். தியாகராய நகர், மாம்பலம், போரூர். கிண்டி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம். கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம். பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.