திருநின்றவூர் தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீர்தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்


திருநின்றவூர் தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீர்தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
x

திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அதனை சுற்றியுள்ள காக்களூர், புட்லூர், செவ்வாப்பேட்டை, பெரியகுப்பம், மணவாளநகர், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கின்றன.

தற்போது பெய்து வரும் மழையால் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் தெருவில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளது. இங்கு வசிக்கும் குழந்தைகள், வயதானவர்கள், பள்ளி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர், மழைநீருடன் கலந்து அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வீடுகளில் இருந்து வெளியே செல்லும் போதும், வீட்டுக்கு வரும் போதும் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் மிதித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 24-11-2022 அன்று திருநின்றவூர் நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்நாள்வரை அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தேங்கியுள்ள மழைநீரில் பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பெருகி இரவு நேரங்களில் வீடுகளுக்குள் செல்வதால் வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story