ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது


ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில்  வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
x

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கொல்லப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்த உணவு பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை

அப்போது மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போச்சம்பள்ளி

போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால் ஜிம்மாண்டியூர் ஏரி, கூச்சானூர் பெரிய ஏரி, திப்பனூர் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பியதால் அந்த பகுதியில் 20-க்கும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

திப்பனூர் கிராமத்தில் வீடுகள், அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. கெங்கிநாயக்கன்பட்டி ஏரி நிரம்பி மழை நீர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஏழாம் அணி வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Next Story