சென்னையில் விட்டுவிட்டு பெய்த மழை: இன்றும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவுக்கு மழை இல்லாத சூழலே இருந்தது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. அதிலும் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது. இதனால் பருவமழை காலத்தில் இயல்பைவிட 70 சதவீதம் குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், மணலி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ஆலந்தூர், புழல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்தது.
விட்டுவிட்டு பெய்தது
இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் இருந்தும் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. சென்னை கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் ஆலந்தூரில் மட்டும் ஒரு மணி நேரத்துக்குள் 8 செ.மீ. வரை மழை கொட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நேற்று பரவலாக பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் போக வழி இல்லாமல் முட்டளவுக்கு தேங்கி கிடந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். அதிலும் சிலருடைய வாகனங்கள் மழைநீரில் சிக்கியதால், அவர்கள் வாகனத்தை தள்ளிச்சென்றதையும் பார்க்க முடிந்தது. தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இன்றும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமான நிலை மாறி மாறி நிலவியது. வெயில் வாட்டி வதைத்து வந்த சென்னையில் இதன் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
சென்னையை போல, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், புழல், மாதவரம் உள்ளிட்ட சில இடங்களில் மழை பொழிந்தது.
நேற்று மழை பெய்த நிலையில், இன்றும் (சனிக்கிழமை) சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.