குமரியில் மழை நீடிப்பு:திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவானது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
குலசேகரம், அக்.18-
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று வேர்க்கிளம்பி, திருவட்டார், சித்திரங்கோடு, சுருளகோடு, குலசேகரம், திற்பரப்பு, திருநந்திக்கரை, தக்கலை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனால் சிற்றாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைப் பகுதிகளில் மிதமான மழையே பெய்தது.
ஏற்கனவே பெய்த மழையால் சிற்றாறு அணைகள் நிரம்பியுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிற்றாறு-1 அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அணை மூடல்
இந்தநிலையில் நேற்று சிற்றாறு அணைப்பகுதிகளில் மழை சற்று குறைந்து நீர்வரத்து குறைந்தது. இதனால் சிற்றார்-1 அணையின் மறுகால் மதகுகள் நேற்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்ட போதிலும் திற்பரப்பு அருவியில் நேற்று மாலை வரை அதிக அளவில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. இதனால், நேற்று 6-வது நாளாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடித்தது.
மழையளவு
இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 1.8, பெருஞ்சாணி அணை- 12.4, சிற்றாறு-1 அணை- 17.2, சிற்றார்-2 அணை-57.4, முக்கடல் அணை- 2.2, பூதப்பாண்டி-3.2, களியல்- 79.2, மயிலாடி-2.6, சுருளக்கோடு- 15, தக்கலை- 1.1, குளச்சல்- 4, பாலமோர்- 20.4, மாம்பழத்துறையாறு-4, அடையாமடை- 27.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.