குமரியில் மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. சிற்றார்-2, பூதப்பாண்டி பகுதிகளில் 15.4 மி.மீ. மழை பதிவானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. சிற்றார்-2, பூதப்பாண்டி பகுதிகளில் 15.4 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து ெதாடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலையில் சில இடங்களில் லேசான வெயில் அடித்தது. மதியம் திடீரென வானில் கார்மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக நாகர்கோவில், பூதப்பாண்டி, மயிலாடி, குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவில் பகுதியில் பெய்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளத்துடன் சாக்கடை நீர் கலந்து ஓடியது. இதனால், அந்த வழியாக சென்றவர்கள் அவதியடைந்தனர்.
தொடர் மழையால், திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது.
மழையளவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சிற்றார் 2- 15.4, பூதப்பாண்டி- 15.4, பேச்சிப்பாறை அணை- 13.2, பெருஞ்சாணி அணை- 8.4, புத்தன் அணை- 8, சிற்றார் 1- 4.8, மாம்பழத்துறையாறு அணை- 10, முக்கடல் அணை- 6.8, கன்னிமார்- 5.8, களியல்- 5.8, கொட்டாரம்- 2.4, நாகர்கோவில்- 6.2, குழித்துறை- 7.5, மயிலாடி- 3.6, சுருளக்கோடு- 9, தக்கலை- 2, பாலமோர்- 12.6, திற்பரப்பு- 5, ஆரல்வாய்மொழி- 7, கோழிப்போர்விளை- 3, அடையாமடை- 6.2, குருந்தன்கோடு- 4.6, முள்ளங்கினாவிளை- 3.6, ஆனைக்கிடங்கு- 9.2 என பதிவாகி இருந்தது.