மழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மழை பாதிப்பு காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.
இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டடத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.