தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழைமொரப்பூரில் அதிகபட்சமாக 19 மி.மீ. பெய்தது
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மொரப்பூரில் 19 மி.மீ. மழை பதிவானது.
பரவலாக மழை
தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று முன் தினம் இரவு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக மொரப்பூரில் 19 மி.மீ.மழை பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- தர்மபுரி- 2, பென்னாகரம்- 6, அரூர்-7.40, பாலக்கோடு- 12,பாப்பிரெட்டிப்பட்டி- 16.6, மொரப்பூர்- 19, நல்லம்பள்ளி- 13, மாரண்ட அள்ளி-7.
மானாவாரி சாகுபடி
இந்த மழை காரணமாக தர்மபுரி ராமன் நகர் பகுதியில் சில வீடுகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து புகுந்தது. அந்த நீரை குடியிருப்பு வாசிகள் வெளியேற்றினார்கள். இந்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதேபோல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மானாவாரி சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.