ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு நடந்தது.
மதுரை,
கேரள மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது தீ பற்ற வைத்து உயிரைப்பறித்த கொடூர சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த குற்றப்பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான போலீஸ் அணிவகுப்பு ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நடத்தப்படுகிறது. மதுரை கோட்டத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உத்தரவின் பேரில், மதுரை மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் நேற்று அணிவகுப்பு நடந்தது. மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகளின் பாதுகாப்புக்கு பாதுகாப்பு படை போலீசார் எப்போதும் துணையாக இருப்பர். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பயணிகளுக்கு தேவையான உதவிகளை 24 மணி நேரமும் செய்ய தயாராக உள்ளனர் என்று பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இந்த அணிவகுப்பில் மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர், ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர், 5 சப்- இன்ஸ்பெக்டர்கள், 4 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 ஏட்டுக்கள், தமிழக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 10 போலீசார் ஆகியோர் பங்கேற்றனர்.