'பிளாஸ்டிக் பயன்பாட்டை ரெயில்வே நிர்வாகம் ஊக்குவிக்கிறது' - ஐகோர்ட்டு அதிருப்தி


பிளாஸ்டிக் பயன்பாட்டை ரெயில்வே நிர்வாகம் ஊக்குவிக்கிறது - ஐகோர்ட்டு அதிருப்தி
x

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் செயல்படுவதாக ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும் 'வந்தே பாரத்' ரெயில்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதில் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய ரெயில்வே நிர்வாகம் அதை கடைபிடிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவுகள் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story