மொரப்பூரில்ரெயில்வே மேம்பால நடைபாதை சீரமைக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு


மொரப்பூரில்ரெயில்வே மேம்பால நடைபாதை சீரமைக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூரில் பராமரிப்பின்றி காணப்படும் ரெயில்வே மேம்பால நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

முக்கிய ரெயில் நிலையம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக மொரப்பூர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக தினமும் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பதி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் சென்று வருகின்றன.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ரெயில் நிலையம் வழியாக தினமும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் மொரப்பூர்- அரூர் சாலை அமைந்துள்ளது. தர்மபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், இந்த சாலை வழியாக சென்று வருகிறார்கள்.

ரெயில்வே மேம்பாலம்

இந்த சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிக நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த ரெயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிகளுடன் கூடிய நடைபாதை முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் இந்த நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரெயில் பயணிகள் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதர்கள் ஆக்கிரமிப்பு

அப்பியம்பட்டியைச் சேர்ந்த பிரதீப்:-

மொரப்பூர் பஸ் நிலையம் மற்றும் சந்தைமேடு பகுதிக்கு சென்று வருபவர்கள், ரெயில் பயணிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் பயன்பாட்டிற்காக இங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளிலும் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த பகுதி முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இங்கு படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதியையொட்டி புதர்கள் அடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் நடைபாதை பயன்பாடு இன்றி உள்ளது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரிவுப்படுத்த வேண்டும்

மூங்கில்பட்டியைச் சேர்ந்த முருகன்:-

மொரப்பூர் ரெயில் நிலையம் அதிக பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்குள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த அமைக்கப்பட்டுள்ள நடைபாதை அங்கு காணப்படும் சுற்றுப்புற சுகாதார சூழல் காரணமாக முறையான பயன்பாடு இன்றி உள்ளது. இந்த படிகளுடன் கூடிய நடைபாதை சற்று செங்குத்தாக இருப்பதால் வயதானவர்கள், சிறுவர், சிறுமிகள் இதை பயன்படுத்துவதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நடைபாதையை பக்கவாட்டில் விரிவுப்படுத்த வேண்டும். இந்த நடைபாதையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மின்விளக்குகள்

மொரப்பூரைச் சேர்ந்த சின்னத்தம்பி:-

மொரப்பூர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வளர்ந்து வருகிறது. இங்கு ரெயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை பகுதி கடந்த பல ஆண்டுகளாக புதர் மண்டிய நிலையில் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. இந்த புதர்களை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும். இரவு நேரத்திலும் இந்த நடைபாதையை ரெயில் பயணிகள் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story