பாம்பன் பாலத்தின் நுழைவுப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்


பாம்பன் பாலத்தின் நுழைவுப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பாலத்தின் நுழைவுப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே தற்போதுள்ள ரெயில்வே பாலம் நூற்றாண்டை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால், அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் வடக்கு கடல் பகுதியில் ரூ.450 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் தண்டவாளங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதாவது, மண்டபம் ரெயில் நிலையத்திற்கும், பாம்பன் ரெயில் பால நுழைவுப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில், ஏற்கனவே கடந்த 105 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த தண்டவாள பாதை சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக அகற்றப்பட்டன.

தற்போது, பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதி வரை, அங்கு மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் தண்டவாளங்கள் அமைக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள கல் குவாரிகளில் இருந்து கனரக லாரிகளில் ஜல்லிக்கற்கள் கொண்டுவரப்பட்டு பாம்பன் ரெயில் பாலத்தில் நுழைவு பகுதியில் இருந்து மண்டபம் ரெயில்வே நிலையத்திற்கு இடைப்பட்ட சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு கொட்டப்பட்டு வருகின்றன.

அந்த ஜல்லிக்கற்களை எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட இடத்தில் சிலிப்பர் கற்கள் போடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு சிலிப்பர் கற்களும் இறக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாம்பன் பாலத்தின் நுழைவுப்பகுதியில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைந்து விடும்" என்று கூறினார்.


Next Story