ரெயில் மறியலுக்கு முயன்றவிவசாயிகள் சங்கத்தினர் 44 பேர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்றவிவசாயிகள் சங்கத்தினர் 44 பேர் கைது
x

கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கலைக்க வேண்டும்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். பொது செயலாளர் பழனிமுருகன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் ராஜேஷ் வரவேற்று பேசினார். தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து மாநில தலைவர் வேலுசாமி கூறுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு குடிநீர் கூட முறையாக கிடைக்காத அளவில் தற்போது கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செயல்படும், கர்நாடக அரசை மத்திய அரசு உடனே கலைத்து விட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தி, துணை ராணுவத்தை பயன்படுத்தி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தீர்வு காணாவிட்டால், மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி, டெல்லி செங்கோட்டை முன்பு அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கைது

தொடர்ந்து அவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. 4 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story